சென்னை:

கிராமப்புற சுகாதார சேவையை மேம்படுத்துவதில் இந்தியாவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தின்போது திருவள்ளூர் தொகுதி தி.மு.க. உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், டெங்கு காய்ச்சல் குறித்து பேசினார்.

அப்போது டெங்கு ஆரம்பித்த இடம் திருவள்ளூர்தான் எனவும், அங்கு அதிகளவில் நோய் தொற்றுகள் ஏற்படும் சூழல் இருப்பதாக கூறியவர்,  புதுமாவிலங்கையில் ஆரம்ப சுகாதார நிலையமும், சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்காக 108 ஆம்புலன்ஸ் சேவையும் ஏற்படுத்தித் தரவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு முதலில் முடித்து வைக்கப்பட்ட இடமும் திருவள்ளூர் தான் என்று  கூறினார். மேலும்,  தமிழகத்தில் கடந்த ஆண்டு 12 ஆரம்ப சுகாதார நிலையங்களும், கடந்த 8 ஆண்டுகளில் 254 சுகாதார நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் தெரிவித்த அவர், கிராமப்புறங்களில் சுகாதாரசேவையை உறுதிப்படுத்திய முதல் மாநிலமாக தமிழகம் திகழ்வதாகக் கூறினார்.

உறுப்பினர் கோரிக்கையின் படி புதுமாவிலங்கையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படு வதோடு 108 ஆம்புலன்ஸ் சேவையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சுகாதாரத்துறையில் 524 பணியிடங்கள் நாளை நிரப்பப்படுவதன் மூலம், காலிப் பணியிடமே இல்லாமல், சுகாதாரத் துறை திகழ்வதாகவும்  அமைச்சர்   தெரிவித்தார்.

ஆனால், மத்திய அரசு கடந்த வாரம் வெளியிட்ட சுகாதாரத்துறையின்  சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகம் 9வது இடத்தில் இருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.