சென்னை: சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டிலிருந்து சிறார்களை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டதில், நாட்டிலேயே தமிழகம் இரண்டாமிடம் வகிக்கிறது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் அஷ்வினி குமார் செளபே மக்களவையில் அளித்த தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.

சிகரெட்டுகள் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் தயாரிப்புகள் சட்டம், 2003 (COTPA), சிகரெட் மற்றும் இதரப் புகையிலைப் பொருட்களை சிறார்களுக்கு விற்பனை செய்வதையும், கல்வி நிறுவனங்களுக்கு அருகே விற்பனை செய்வதையும் தடை செய்கிறது.

இந்த விஷயத்தில் தமிழகம் நாட்டிலேயே சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களில் இரண்டாமிடம் வகிக்கிறது. முதலிடத்தில் குஜராத் வருகிறது. தமிழகத்தில் கடந்தாண்டில் மட்டும் 6425 பேருக்கு புகையிலைப் பொருட்கள் தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டு ரூ.13.4 லட்சம் வசூலிக்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் 8000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.14.34 லட்சம் வசூலிக்கப்பட்டது. மூன்றாமிடம் பிடித்த பஞ்சாப் மாநிலத்தில் அபராதமாக ரூ.13.14 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தல் கூடாது மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவிற்கு அத்தகையவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று COTPA சட்டத்தின்படி தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.