டில்லி

பிரபல பத்திரிகையான இந்தியா டுடே தமிழக அரசுக்குச் சிறந்த செயல்பாட்டுக்கான 3 விருதுகளை வழங்கி உள்ளது

பிரபல பத்திரிகையான இந்தியா டுடே ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து செயல்படும் மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கி வருகின்றன.    இந்த வருடத்துக்கான விழா நேற்று முன் தினம் அதாவது வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது    இந்தியா டுடே அளிக்கும் இந்த விருதுகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வழங்கினார்.

இதில் தமிழகத்துக்குப் பெரிய மாநிலங்களில் அனைத்துத் துறைகளின் செயல்பாட்டில் மிகச் சிறந்த மாநிலம் என்னும் விருது, சட்டம் ஒழுங்கை சிறப்பாகப் பராமரிப்பதில் மிகச் சிறந்த மாநிலம் என்னும் விருது,  மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் மிகச் சிறந்த முன்னேற்றம் அடைந்த மாநிலம் என்னும் விருது என மூன்று விருதுகள் வழங்கபட்டுள்ளன.

இவ்விருதுகளைத் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் டி ஜெயக்குமார் பெற்றுக் கொண்டார்.   அப்போது தமிழக அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் உடன் இருந்தார்.   இந்த விழா முடிந்ததும் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் உரையாடினார்.

அப்போது அவர், “ தமிழக அரசு அனைத்துத் துறையிலும் சிறந்த வகையில் செயல்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொலைநோக்குப் பார்வையுடன் ‘2023 விஷன்’ எனும் ஆவணத்தைத் தயாரித்தார். அவற்றில் கிட்டத்தட்ட 217 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு அத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில், இந்த விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. சென்ற ஆண்டும் இதேபோன்று இந்தியா டுடே பத்திரிகை வழங்கிய விருதுகளில் பெரிய மாநிலங்களில் அனைத்துத் துறைகளின் செயல்பாட்டில் மிகச்சிறந்த மாநிலம் என்ற விருது உள்பட முக்கிய விருதுகளைத் தமிழ்நாடு அரசு பெற்றது” எனத் தெரிவித்துள்ளார்.