கொரோனா பரவல் தமிழகத்தில் 2ம் நிலையிலேயே இருக்கிறது: சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: கொரோனா பரவலில் இன்னும் தமிழகம் 2ம் நிலையில் தான் இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி இருக்கிறார்.

உலகம் எங்கும் பரவி வரும் கொரோனா, இந்தியாவிலும் பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து விட்டது. தமிழகத்திலும் அதன் தாக்கம் இருக்கிறது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந் நிலையில்  தமிழகத்தில் கொரோனா பரவல் 2ம் நிலையிலேயே தான் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி இருக்கிறார்.

இது பற்றி அவர் மேலும் கூறி இருப்பதாவது: கொரோனா தொற்றில் தமிழகம் இன்னும் 2ம் நிலையில் தான் இருக்கிறது. சமூக பரவலான 3ம் நிலையை நோக்கி முன்னேறுவதை தடுக்க, மிகவும் கடினமாக உழைக்கிறோம். கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அது எவ்வாறு அவர்களுக்கு பரவியது என்பதையும் கண்டறிகிறோம். இது தொற்று மேலும் பரவாமல் இருக்க உதவும்.

பிப்ரவரி மாதத்தின் 2வது வாரத்தில் இருந்து வெளிநாட்டில் இருந்த மற்றும் திரும்பி வந்த அனைவரிடமும் பரிசோதிக்க தொடங்கினோம். மேலும் கொரோனா அறிகுறிகளைக் காட்டாதவர்களுக்கு வீட்டில் 28 நாட்கள் கடுமையான தனிமைப்படுத்தலில் இருக்குமாறு பரிந்துரைக்கிறோம். அவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால், அவர்களும் பரிசோதிக்கப்படுகின்றன்ர்.

தமிழகத்தில் கொத்து, கொத்தாக கொரோனா பரவல் இல்லை. ஆனால் சில மாநிலங்களில் இந்த நிலைமை தொடங்கிவிட்டது. சுகாதாரம் குறித்து நாங்கள் நிறைய விழிப்புணர்வுகளை மேற்கொண்டு உள்ளோம். தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரித்தல், சானிடைசர்கள் மற்றும் சோப்பை அடிக்கடி பயன்படுத்துதல், இயந்திரங்கள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி கட்டிடங்கள் மற்றும் வாகனங்களின் மேற்பரப்புகளை நாங்கள் தொடர்ந்து கிருமி நீக்கம் செய்து வருகிறோம்.

ஓமந்தூரார் மருத்துவமனையை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றி உள்ளோம். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சையளிக்க பிரத்யேக வார்டுகள் உள்ளதை உறுதி செய்துள்ளோம். தனிமைப்படுத்தலின் போது தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

நாங்கள் தனியார் மருத்துவமனைகளுடன் வெற்றிகரமாக ஒத்துழைத்து வருகிறோம். அவர்களில் சிலர் ஏற்கனவே கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகளை ஒதுக்கியுள்ளனர். சோதனை மையங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. முக்கியமாக லேசான அறிகுறிகளைக் கொண்டவர்களை காண்கிறோம். இப்போதைக்கு, ஒரு நோயாளி கூட ஐ.சி.யுவில் அனுமதிக்க வேண்டியதில்லை. ஒருவரை தான் இந்த கொரோனாவுக்கு இழந்துள்ளோம். மதுரையைச் சேர்ந்த அந்த 54 வயதான ஆண், ஏற்கனவே பல கோளாறுகளுடன் இருந்தவர். ஆனாலும் அவரை காப்பாற்ற முயற்சித்தோம். இறுதியில் நாங்கள் அவரை இழந்தோம்.

அவரைத் தவிர, பம்மலைச் சேர்ந்த 73 வயதான ஒரு பெண்மணி மட்டுமே கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், ஆனால் இப்போது அவர் குணமாகி விட்டார். அவர் நன்றாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் என்னிடம் சொல்கின்றனர்.

எங்கள் மிகப்பெரிய பலம் என்னவென்றால், வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப எங்களை மாற்றிக் கொண்டது. நாங்கள் தொடர்ந்து அதைச் செய்வோம், தேவைப்படும்போது மாற்றங்களைச் செய்ய ஏதுவாக இருப்போம். இது நீண்ட கால செயல்முறையாக மாறினால், அதை கையாளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட அளவிலான சுகாதாரக் குழுக்களை நாங்கள் முன்னேற்பாடாக தயாராகவே வைத்து உள்ளோம் என்றார்.