சென்னை:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நடைபெற இருக்கும் தமிழக முழு அடைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி டில்லியில் போராடி வரும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு, முழு அடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் , மனிதநேய மக்கள் கட்சிகள் கலந்துகொண்டன.

இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம்  கூறியதாவது

தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தை நடத்த ஏற்கனவே அனைத்து கட்சி சார்பில் கூடி அறிவித்திருக்கிறோம். அந்த போராட்டம் எந்த வகையில் அமைய வேண்டும் என்பது தொடர்பாக திமுக, காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, விடுதலை சிறுத்ததை கட்சி, மனிதநேயம் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கூடி கலந்து ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

அது குறித்து பல்வேறு கருத்துகள் பரிமாறி முடிவு எடுத்திருக்கிறோம். அதே நேரத்தில் டில்லியில் திரு அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தொடர்ந்து ஏறக்குறைய 40 நாளாக பல்வேறு நிலைகளில் பல சிரமங்களை ஏற்றுக் கொண்டு தொடர் போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த போராட்டத்தை தற்காலிகமாக அவர்கள் நிறுத்திவிட்டு 25ம் தேதி நடைபெறவிருக்கக்கூடிய முழு அடைப்பு போராட்டத்திற்கும் தொடர்ந்து அனைத்துக் கட்சி சார்பில், நாங்கள் எடுத்திருக்கும் நடவடிக்கைகளுக்கு அவர்கள் துணை நிற்க வேண்டும். அந்த போராட்டத்தில் அவர்களும் பங்கேற்க வேண்டும்.

எனவே அவர்களின் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு இந்த போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்ற நிலையில் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். தீர்மானத்தை அய்யாக்கண்ணு  நாங்கள் அனுப்பிவைத்து இருக்கிறோம்.

அனைத்து கட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் என அனைவரையும் அழைத்துக் கொண்டு பிரதமரை சந்திக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.

அந்த தீர்மானத்தின் நகலோடு, பிரதமருக்கு எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் நான் அனுப்பி வைத்திருக்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் 2 நாட்களாக டில்லியில் தங்கி பிரதமரை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் எந்தவித பலனும் கிடைக்கவில்லை.  நான் எழுதிய கடிதத்திற்கும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.