சித்தூர்:

ந்திராவின் சித்தூர் மாவட்டத்தில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை ஆந்திர அரசு  துவக்கி உள்ளது. மேலும்,  இதுகுறித்து, ஆந்திர அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை ஒத்திவைத்துள்ளது.

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் ஓடும் கொசஸ்தலை ஆறு தமிழகத்தின், திருவள்ளூர் மாவட்ட விவசாயத்துக்கு முக்கிய நீராதாரமாக விளங்குகிறது.   கொசஸ்தலை ஆற்றிலிருந்து லங்கா கால்வாய் வழியாக நீர் தமிழகத்தை வந்து சேர்கிறது.

இந்த நிலையில் ஆந்திர அரசு, லங்கா கால்வாயை மறித்து நான்கு இடங்களில் தடுப்பணைகள் கட்டத் துவங்கி இருக்கிறது.  28 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்தப் பணிகள் நடக்கின்றன.

இந்த தடுப்பணைகள் முழுவதுமாகக் கட்டி முடிக்கப்பட்டால்  தமிழகத்தைச் சேர்ந்த பத்து  கிராமங்கள் பாதிக்கப்படும். . சுமார் 2,000 ஏக்கர் நிலங்கள் கொசஸ்தலை ஆற்றின்மூலம் பயன்பெற்றுவருகின்றன.

ஆகவே  திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் ஆந்திர அரசின் தடுப்பணைத் திட்டத்துக்கு, எதிர்ப்புத்  தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து  தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள், தடுப்பணை அருகே ஆந்திர அதிகாரிகளிடம் இன்று பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால் ஆந்திர தரப்பில் திடீரென பேச்சுவார்த்தையை ஒத்தி வைத்துவிட்டனர். வரும் 19ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.