டெல்லி:

கடந்த 2016ம் ஆண்டில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாவில் பிரபலமான இடங்களின் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

உ.பி. மாநிலம் உள்ளூர் சுற்றுலாவில் இரண்டாவது இடத்திலும், வெளிநாட்டு சுற்றுலாவில் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியில் மகாராஷ்டிரா மாநிலம் 2ம் இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் முக்கிய சுற்றுலா தளமான கோவா உள்ளூர் சுற்றுலா தளங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை. ஆனால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்ததில் 9ம் இடத்தை கோவா பிடித்துள்ளது. போதுமான விளம்பரம், பிரச்சாரம் இன்மையால் குஜராத் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்க தவறிவிட்டது. உள்ளூர் சுற்றுலா பயணிகளை ஈர்த்ததில் இது 9ம் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு உள்ளூர் சுற்றுலா 12.68 சதவீதமும், வெளிநாட்டு சுற்றுலா 5.92 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. உள்ளூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழகம் முதலிடமும், இதை தொடர்ந்து உ.பி., ஆந்திரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, மேற்குவங்கம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 10 மாநிலங்கள் உள்ளூர் சுற்றுலா மூலம் 84.21 சதவீத பங்களிப்பை அளித்துள்ளன என்று மத்திய சுற்றுலா துறை அமைச்சக புள்ளவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உலகளவிலும் இந்திய சுற்றுலா துறை வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 5.27 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்தாண்டு 19.5 சதவீதம் கூடுதலாக 6.30 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர்.