டீசல் விலையுயர்வு – ஜூலை 22ம் தேதி சரக்கு லாரிகள் ஒருநாள் வேலைநிறுத்தம்!

சென்னை: டீசல் விலையுயர்வைக் கண்டித்து, தமிழ்நாடு சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம், ஜூலை 22ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

மேலும், ஊரடங்கு காலத்தில், வணிக வாகனங்களுக்கான சாலை வரியிலிருந்தும் விலக்கு அளிக்குமாறு கோரியும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

உலகளாவிய அளவில், கொரோனா ஊரடங்கால், கடும் பொருளாதார மந்தநிலை நிலவும் சூழலிலும், இந்திய அரசுகளின் வரி வருவாய் கொள்கைகளால், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு ஏற்படுகிறது.

இந்த விலையுயர்வு என்பது அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வேலைநிறுத்தம் பற்றிய தகவலை, தமிழ்நாடு சரக்கு லாரிகள் சங்கத் தலைவர் என்.மனோகரன் தெரிவித்தார்.