தமிழ்நாடு : போக்குவரத்து தொழிலாளர்கள் செப் 24 முதல் வேலை நிறுத்தம்

சென்னை

செப்டம்பர் 24 முதல் காலவரையற்றை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழக தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஊதிய உயர்வு, வரவேண்டிய பாக்கித்தொகை, ஆகியவை உள்பட பல கோரிக்கைகளுக்காக போக்குவரத்து தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.   அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தைகளில் எந்த ஒரு தீர்வும் காணப்படவில்லை.  இந்நிலையில் நேற்று தொழிற் சங்கங்கள் சார்பில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.   அதில் தெரிவிக்கப்பட்டதாவது :

“எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வரும் செப்டம்பர் 24 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.   இதற்கான நோட்டீசு போக்குவரத்து செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.  ஊதிய உயர்வு, தரவேண்டிய தொகை மற்றும் எந்த ஒரு கோரிக்கைக்கும் அரசு சரியான பதில் அளிக்காததை ஒட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.    அரசு எங்கள் கோரிக்கைக்கு பேச்சு வார்த்தை மூலம் நிரந்தர தீர்வு ஒன்றை அறிவித்தால் போராட்டத்தை திரும்பப் பெறுவோம்” என கூறப்பட்டது.

இந்த போராட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சிஐடியூ, எஐடியுசி போன்ற தொழிலாளர் சங்கங்கள் உட்பட 10 க்கும் மேற்பட்ட சங்கங்கள் பங்கு பெற உள்ளதாக தெரிய வருகிறது.