சென்னை:
சென்னையில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் இவ்வளவு பெரிய கன மழை பெய்து உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நேற்று துவங்கியதாக அறிவித்தாலும் அறிவித்தார்கள், ஆரம்பத்திலேயே சென்னையில் அதிரடி காட்டி விட்டது மழை.

 

நேற்று இரவு சென்னை மக்கள் தூங்கச் செல்லும் வரை இவ்வளவு பெரிய மழை பெய்யும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இரவோடு இரவாக பெய்ய தொடங்கியது கனமழை. இன்று காலை வரை விட்டு விட்டு அடித்து நொறுக்கியது. சென்னை அண்ணா பல்கலை பகுதியில் அதிகாலை வரை 7.2 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கம் 5.5 செ.மீ, மீனம்பாக்கம் 4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக செங்குன்றம் பகுதியில் 13 சென்டிமீட்டர் மழையும், சோழாவரம் பகுதியில் 5.5 செ.மீ மழையும் பெய்துள்ளது.

இடைவிடாது பெய்த பலத்த மழை காரணமாக சென்னையின் பல பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்கு காரணம் மொத்தமாக அடர்த்தியாக பெய்த கனமழை தான் என்று கூறுகிறார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். இதுபற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான், சென்னையின் மீது எவ்வாறு மேகமூட்டம் இருந்தது என்பது பற்றிய ஒரு செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணா நகர் ஏரியாவின் மேற்பரப்பில் சிவப்பு வண்ணத்தில் மேகங்கள் குறிக்கப்பட்டிருந்தது. இதை தக்காளி என்று வர்ணிக்கிறார் பிரதீப் ஜான். இதுபோன்ற தக்காளி உருவாகுவது கன மழையை குறிக்கும். இன்றும் அதுதான் நடந்துள்ளது.

மேலும் பிரதீப் ஜான் கூறுகையில், சென்னை நகரின் பல பகுதிகளில் கன மழை பதிவாகி உள்ளது. மயிலாப்பூர் பகுதியில் ஒரு மணி நேரத்துக்குள் வானம் பொத்துக்கொண்டு ஊற்றியதைபோல மழை பெய்துள்ளது. சென்னையின் பல பகுதிகள் செஞ்சுரி அடித்து உள்ளன அதாவது 100 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவாகி உள்ளது மயிலாப்பூர் பாடி பாலவாக்கம் போன்றவை இந்த லிஸ்டில் வருகின்றன மிகவும் அடர்த்தியாக மழை பெய்ததால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும்.