சென்னை: கொரோனா பரிசோதனை முடிவுகளைப் பெறுவதில் செலவாகும் நேரத்தைக் குறைப்பதற்காக, மொத்தமாக சாம்பிள்களை பரிசோதிக்கும் ‘பூல்டு டெஸ்ட்’ முறை, தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் பின்பற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இதன்மூலம் ஒரேநேரத்தில் அதிக நபர்களையும் பரிசோதிக்க முடியும்.
சென்னையில் 32 மற்றும் அதன் மூன்று சுற்றுப்புற மாவட்டங்களில் 14 என்று, மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 88 கொரோனா மரணங்கள் பதிவானவுடன், இந்த முறைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, 5 நபர்களின் சாம்பிள்கள் மொத்தமாக எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். அதில் நெகடிவ் என்று முடிவு வந்துவிட்டால் பிரச்சினையில்லை. ஆனால், அதில் பாசிடிவ் ரிசல்ட் வந்தால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
தற்போதைய நிலையில், முடிவுகள் தெரியவருவதற்கு, 6 நாட்கள் வரை ஆகிறது என்பதால், நோயை முதலிலேயே கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கு ஏற்றவகையில் இந்த பரிசோதனை செயல்பாட்டிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.