சென்னை: கழுகும் சாரைப்பாம்பும் மோதிக்கொள்ளும் ஒரு அற்புதமான புகைப்படத்தை எடுத்தமைக்காக, சென்னையின் பறவை ஆர்வலர் மற்றும் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் சம்பத் சுப்பையாவுக்கு, இந்தாண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பறவையின் நடத்தைப் பிரிவில் இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதத்தில், காஞ்சிபுரத்திலுள்ள சென்னேரி ஏரியில் இந்த அரிய புகைப்படத்தை எடுத்தார் சம்பத்.
ஒரு சாரைப்பாம்பை தனது இரையாக்க முயற்சிக்கும் கழுகுக்கும், அந்தப் பாம்புக்கும் இடையே பரிமாறிக்கொள்ளப்படும் நொடிநேர பார்வைதான் இந்தப் புகைப்படத்தின் சிறப்பு. லண்டனின் இயற்கை வரலாறு மியூசியம் இந்த விருதை அறிவித்துள்ளது.
“பெரியவர் வகைப்பாட்டில், தமிழ்நாட்டிலிருந்து இந்த உயரிய விருதைப் பெறும் முதல் நபர் நான் என்று நினைக்கையில் மிக ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்று கூறியுள்ளார் 36 வயதாகும் சம்பத் சுப்பையா.