நீட் தேர்வில் சாதித்த தமிழக அரசுப் பள்ளி மாணவர் – பின்னணி காரணம்?

மதுரை: தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த, அரசுப் பள்ளியில் படித்த ஏழை மாணவர் ஒருவர், நீட் தேர்வில் 664/720 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய அளவில், அரசுப் பள்ளி மாணாக்கர்களிலேயே முதலிடம் பெற்று சாதித்துள்ளார்.

என்.ஜீவித்குமார் என்ற மாணவர், ஒரு இடையரின் மகனாவார். இவர் அகில இந்திய அளவில் 1823வது ரேங்க் பெற்றுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் மாணவர்தான் இந்த ஜீவித்குமார். இவர், மாநில அரசு நடத்திய பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 600க்கு 548 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றவர்.

தனது இரண்டாவது முயற்சியில் நீட் தேர்வில் சாதித்துள்ளார் அந்த மாணவர். மாவட்ட அளவில் பள்ளித் தேர்வில் முதலிடம் பெற்றும், ஒரு ஆண்டை செலவழித்து, பண உதவிபெற்று நீட் பயிற்சியெடுத்தே அவரால் மருத்துவர் கனவை நிறைவுசெய்ய முடிந்துள்ளது.

இவரின் இந்த வெற்றிக்குப் பின்னால், முன்னாள் அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமலா ஜெயகாந்தன் பேருதவியாக இருந்துள்ளார். இவர், மருத்துவக் கனவு நனவாகாமல் தற்கொலை செய்துகொண்ட அனிதா என்ற மாணவியின் மரணத்திற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து, அதைக் காவல்துறை தடுத்த காரணத்தால் தன் அரசுப் பணியை உதறியவர்.