துரை

மிழர்கள்  இந்துக்கள் கிடையாது என மதுரை ஆதினம் ஒரு தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ஆயிரம் கால் மண்டபம் பகுதியில் தீப்பிடித்தது.    தீயணைப்புப் படையினர் வெகுநேரம் போராடிய பின் தீயை அணைத்தனர்.   தீ பிடித்ததற்கான உண்மைக் காரணம் இன்னும் அறியப்படவில்லை.   இந்நிலையில் பாஜக, மற்றும் இந்து முன்னணியினர் இது குறித்து விசாரிக்க வேண்டும் என கோரிக்க விடுத்துள்ளனர்.

மதுரை ஆதீனம் இது குறித்து தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்துள்ளார்.  அப்போது அவர், ”மதுரை மீனாட்சி சுந்தரேசுவர் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு சிவன் மற்றும் பார்வதியின் கோபமும் ஞானிகளின் சாபமும் காரணம்.   திருஞான சம்பந்தரால் ஆரம்பிக்கப்பட்டது இந்த ஆதீனம்.   அவருடைய எந்த ஒரு பதிகத்திலும் இந்து என ஒரு வார்த்தை உபயோகிக்கப்படவில்லை.    சைவம் மற்றும் வைணவம் என மட்டுமே கூறப்பட்டுள்ளது.

இனியும் இது போல தீய சம்பவங்கள் நிகழாமல் இருக்க முதல்வர் ஈ பி எஸ் மற்றும் ஓ பி எஸ் ஆகியோர் பிரதமர் மோடியிடம் சொல்லி இந்து சமய அறநிலையத்துறையை ஒழித்துக் கட்ட வேண்டும்.   அதன் பின் கோயில்களை தமிழக செல்வந்தர்கள் மற்றும் பக்திமான்களைக் கொண்டு நிர்வகிக்கலாம்.   அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு  சைவம், வைணவம்,  மடம்,  ஆதினம் என்றால் என்னவென்றே தெரியாது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸவரர் கோவில் திருவிழாக்களில் பல கட்டளைகள் மதுரை ஆதினத்துக்கு உண்டு.  இது 2500 ஆண்டு கால பழக்கமாகும்.   ஆனால் எந்த ஒரு விழாவுக்கும் ஆதினத்துக்கு இந்த அதிகாரிகள் அழைப்பு விடுப்பது கிடையாது.   ஊதியம் வந்து விடுவதால் அவர்கள் எங்களை அலட்சியம் செய்கின்றனர்.    கோயிலுக்குள்ளும் இவர்கள் பாண்ட் அணிந்து வருவது மிகவும் தவறு.

சைவம், வைணவம் மட்டும் என இருந்த இந்த தமிழ்நாட்டில் இந்து என்னும் வார்த்தையை புகுத்தியது யார் எனத் தெரியவில்லை.   சைவத்தில் வைணவமும் அடக்கம்.    இந்த மதுரை ஆதீனம் சைவ மடம் ஆகும்.   நாங்கள் சைவர்கள் தான் இந்துக்கள் அல்ல”  எனக் கூறி உள்ளார்.