தமிழர்கள்… மூடநம்பிக்கையாளர், சாதி – மத வெறியர்கள், சுயமரியாதை அற்றவர்கள்: சுப. உதயகுமாரன் ஆதங்கம்

கூடங்குளம் அணுவுலை எதிர்ப்பு இயக்கத்தை கட்டமைத்த தீவிரமாக போராடிய சுப. உதயகுமாரன் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு சுமார் 5000  வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.

தனது தோல்வி குறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“தேர்தல் முடிவுகள் தேறுதல் தருபவையாக இல்லை என்றாலும், அவற்றை ஏற்றுக் கொள்கிறேன். அரசியல் மாற்றம் தேவை எனும் கருத்தை தமிழக மக்கள் முழுமையாக நிராகரித்திருப்பது ஆச்சரியமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. ஒருவேளை, அதை இன்னும் தெளிவாகவும், விளக்கமாகவும், நம்பகத்தன்மையுடன் சொல்ல வேண்டுமோ என்னவோ?

அழிவைத் தரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க இன்னும் படைப்புத்திறனுடன் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றே நினைக்கிறேன்.

இராதாபுரம் தொகுதியில் நானும், எனது நண்பர்களும் மிகக் கடுமையாக உழைத்து ஏறத்தாழ 200 கிராமங்களிலும் கூடங்குளம் அணுஉலைத் திட்டம் பற்றிய எங்களது நிலைப்பாட்டை, அடுத்தடுத்த சந்ததிகள் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்துக்களை எல்லாம் எடுத்துச் சொன்னோம். ஊர் ஊராக, தெருத் தெருவாக, வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து, புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள் கொடுத்துப் பேசினோம். தேர்தலை ஒரு போராட்டமாகவேப் பார்த்தோம், கையாண்டோம்.

எங்களுக்கு தமிழர் தேசிய முன்னணி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ விடுதலை) தவிர வேறு எந்த அரசியல் கட்சியோ, கூட்டணியோ ஆதரவு தரவில்லை; நாங்கள் கேட்கவுமில்லை.

எங்களைச் சுற்றி பெரும் பணமழை பொழிந்தது, சாராய ஆறு ஓடியது. இந்நிலையில் வெறும் ஐந்து லட்சம் ரூபாயை மட்டுமே செலவு செய்து, சுவர் விளம்பரங்கள், பதாகைகள், பேரணிகள் ஏதுமின்றி, வெறும் இரண்டு பிரச்சார வாகனங்களின் உதவியோடு கிட்டத்தட்ட 5,000 வாக்குகள் பெற்றிருக்கிறோம். இதை ஒரு சாதனையாகவேப் பார்க்கிறேன்.

சுப. உதயகுமாரன்
சுப. உதயகுமாரன்

பணத்தை வெறுத்து ஒதுக்கி, ஒரு புதிய விடிவுக்காய் என்னை/எங்களை நம்பி வாக்களித்திருக்கும் மக்களுக்கு மனமார நன்றி தெரிவிக்கிறேன். அவர்களுக்கு என்றென்றும் உண்மையாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். படுதோல்வி அடைந்திருக்கும் நிலையில், அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாமலிருப்பதற்கு உளமார வருந்துகிறேன்.

தேர்தலுக்காக உழைத்த உள்ளூர் தோழர்களும், தமிழகம் முழுவதுமிருந்து வந்திருந்த வெளியூர்த் தோழர்களும் எளிமையாக வாழ்ந்தோம், கடுமையாக உழைத்தோம், சுற்றிச் சுழன்றோம். அத்தனை தோழர்களுக்கும் இந்தத் தருணத்தில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இராதாபுரத்தில் வென்றிருக்கும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. இன்பதுரை அவர்களுக்கு கடலோர மக்களும், கூடங்குளம் சுற்றுவட்டார மக்களும் பெருவாரியாக வாக்களித்திருக்கின்றனர். இதனை மனதிற்கொண்டு அவர் கூடங்குளம் திட்ட விரிவாக்கத்தை எதிர்க்க வேண்டும் என்றும், மக்கள் மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்குகளை நீக்க வேண்டுமென்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். போராட்டத்தை ஒருங்கிணைத்தவன் என்ற முறையில் என்மீது உள்ள வழக்குகளை வேண்டுமானால் வைத்துக்கொண்டு, தயவு செய்து மக்களை விடுவியுங்கள்.

கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இடிந்தகரைப் போராட்டத்தை பல இடர்பாடுகளுக்கிடையே ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக இழுத்துக் கொண்டுவந்து நானும், எனது தோழர்களும் இடிந்தகரையில் நிறுத்தியிருக்கிறோம். இனி அந்தப் போராட்டத்தை எப்படி தொடர்வது என்று அங்குள்ள மக்கள் முடிவெடுப்பார்கள். நான் உள்ளூர் மற்றும் வெளியூர் நண்பர்களுடன் அறிவுத் தளத்திலும், அரசியல் களத்திலும், போராட்ட வெளியிலும் தொடர்ந்து இயங்குவேன்.

கருப்பு பெரியார் வாழ்ந்த தமிழகத்தில் தற்கால தமிழர்கள் மூட நம்பிக்கைகளுக்குள்ளும், சாதி வெறியிலும், மத வெறியிலும், பெண்ணடிமைத் தனத்திலும், சுயமரியாதையற்ற அடிமைத்தனத்திலும் கிடந்து உழல்வது பெருத்த வேதனையளிக்கிறது. கூடவே இயற்கை வளங்கள் கொள்ளை போவதையும், வாழ்க்கை கண்ணியமின்றி, பாதுகாப்பின்றி பறிபோய்க் கொண்டிருப்பதையும், வருங்காலம் இருண்டு கிடப்பதையும் கவனிக்காமல் ஒருவித மருட்சியுடன் மக்கள் காலங்கழிப்பது கவலையளிக்கிறது.

தமிழகத்தில் ஒரு சமூக-பொருளாதார-அரசியல் மறுமலர்ச்சிக்கான தேவை விசுவரூபம் எடுத்து நிற்பதை நாம் அனைவருமே பார்க்கிறோம், உணர்கிறோம். ஆனால் ஒன்றும் செய்யாமல் தவிர்க்கிறோம், அல்லது ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறோம். எனவே ஒரு பச்சை சிறியாராக எனது எளிய பங்கினை தமிழகத்திற்கு அளித்திட விழைந்து நிற்கிறேன். ஒத்தக் கருத்துடைய தோழர்களை உடன் அழைத்துக் கொண்டு, சமூக செயற்பாடுகள், பொருளாதார நடவடிக்கைகள், மக்கள் போராட்டங்கள், தேர்தல் அரசியல் என இடம், பொருள், ஏவல் அறிந்து வழிமுறைகளை அமைத்துக் கொண்டு தொடர்ந்து இயங்குவேன்.

தற்போது சில குடும்பப் பொறுப்புக்களையும், கடமைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டியிருப்பதாலும், அதற்கு வேண்டிய பொருளீட்டும் தேவையிருப்பதாலும், சற்றே ஓய்வு தேவைப்படுவதாலும், ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு சந்திக்கிறேன். நன்றி!” இவ்வாறு சுப. உதயகுமாரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.