சென்னை: என்எல்சி மற்றும் என்டிபிசி ஆகிய மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க முடியாமல், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்(TANGEDCO) கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இந்த நிறுவனம் வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.6032 கோடிகள். இவ்வளவு அதிகமான நிலுவைத்தொகையை வைத்திருப்பதன் மூலம், நாட்டிலுள்ள பிற பகிர்மான நிறுவனங்களைக் காட்டிலும் நாட்டிலேயே முதலிடத்தை வகிக்கிறது TANGEDCO.

என்எல்சி நிறுவனத்திற்கு ரூ.3,460 கோடியும், என்டிபிசி நிறுவனத்திற்கு ரூ.999 கோடியும் நிலுவை பாக்கி உள்ளது. இந்த நிலுவைத் தொகையானது உரிய காலத்தில் வழங்கப்படாமல் போனால், மின்சாரத்தை வழங்கக்கூடிய என்எல்சி போன்ற நிறுவனங்கள், தங்களின் வழங்கலை நிறுத்திவிடக்கூடிய அபாயம் உள்ளது.

கடந்த 45 நாட்களுக்கும் மேலாக இந்தத் தொகை நிலுவையில் உள்ளது. முதன்மை மற்றும் துணைநிலை கட்டணங்கள் இவற்றில் அடக்கம். தனக்கு தேவையான மின்னாற்றலில், மூன்றில் ஒரு பங்கை, மேற்கூறிய மத்திய அரசு நிறுவனங்களிடமிருந்து வாங்குகிறது TANGEDCO. இதன்மூலம், அந்நிறுவனங்களை மிகவும் அதிகளவில் சார்ந்துள்ள நிறுவனமாக திகழ்கிறது அது.