சென்னை:
கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிக மின் கட்டணத் தொகையை கணக்கீடு செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்த தெரிந்துகொள்ள இணையதள வசதியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ)  அறிவித்துள்ளது.
பயனர்ர்கள் டான்ஜெட்கோ இணையதளத்திற்கு சென்று விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
இணையதள முகவரி: http://tangedo.gov.in

மின் கட்டணம் கணக்கிடப்படுவது எப்படி?

தமிழ்நாட்டில் வீடுகளில் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு முதல் 100 யூனிட்கள்  இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்திற்காக காரணம்,  ‘டெலஸ்கோபிக் டாரிஃப்’ என்ற வகையில் கணக்கிடப்படுகிறது.

உதாரணமாக, ஒருவர் இரண்டு மாதங்களுக்கு இரு நூறு யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தினால், பின்வருமாறு அவருக்கான கட்டணம் கணக்கிடப்படும்.

முதல் 100 யூனிட்கள்: விலை இல்லை

101வது யூனிட்டிலிருந்து 200 யூனிட்கள்

(ஒரு யூனிட்டின் விலை ரூ. 1.5): 100X 1.5 = ரூ. 150

நிலையான கட்டணம்: ரூ. 20

ஆகவே மொத்தக் கட்டணம்: 170 ரூபாய்

ஆனால், அதே நபர் இரு மாதங்களுக்கு 380 யூனிட் பயன்படுத்தினால் கட்டணம் வெகுவாக அதிகரிக்கும்.

முதல் 100 யூனிட்கள்: விலை இல்லை

101வது யூனிட்டிலிருந்து 200 யூனிட்கள்

(ஒரு யூனிட்டின் விலை 1.50க்குப் பதிலாக ரூ. 2ஆக அதிகரிக்கும்): 100X 2= ரூ. 200

201வது யூனிட்டிலிருந்து 380 யூனிட்கள்

(ஒரு யூனிட்டின் விலை 3 ரூபாய்) : 180 X 3= ரூ. 540

நிலையான கட்டணம்: ரூ. 20

ஆகவே மொத்தக் கட்டணம் 740 ரூபாயாக உயரும். முந்தைய மாதத்தைவிட அதிகமாக 180 யூனிட்களே பயன்படுத்தியிருந்தாலும் கட்டணம் 570 ரூபாய் அதிகரிக்கும்.

அதே நபர் 510 யூனிட்களைப் பயன்படுத்தினால், கட்டணம் இன்னும் வெகுவாக அதிகரிக்கும். 101 – 200, 201-500, 501 யூனிட்களுக்கு மேல் என எல்லாப் பிரிவிலுமே கட்டண அதிகரிப்பு இருக்கும்.

முதல் 100 யூனிட்கள்: விலை இல்லை

101வது யூனிட்டிலிருந்து 200 யூனிட்கள்

(ஒரு யூனிட்டின் விலை 3.50ஆக அதிகரிக்கும்): 100X 3.50 = ரூ. 350

201வது யூனிட்டிலிருந்து 500 யூனிட்கள்

(ஒரு யூனிட்டின் விலை 4.60 ரூபாய்) : 300 X 4.6 = ரூ. 1380

501வது யூனிட்டிலிருந்து 510வது யூனிட்வரை

(ஒரு யூனிட்டின் விலை ரூ. 6.60) : 10 X 6.6 = ரூ. 66

நிலையான கட்டணம்: ரூ. 20

ஆகவே மொத்தக் கட்டணம் 1,846 ரூபாயாக உயரும். முதல் மாதத்தைவிட அதிகமாக 310 யூனிட்களே பயன்படுத்தியிருந்தாலும் கட்டணம் 1,676 ரூபாய் அதிகரிக்கும்.