தஞ்சை ஆணவ கொலை வழக்கு: 3 பேருக்கு தலா 3 ஆயுள்

தஞ்சை:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோட்டூர் கீழ மருதூரை சேர்ந்த அமிர்தவல்லியும், பழனியப்பனும் காதலித்து திருமணம் செய்தனர். இருவரும் வெவ்வெறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இதனால் பழனியப்பனின் சகோதரர்கள் ராமகிருஷ்ணன், சிவசுப்பிரமணியன், மகேந்திரன், துரைராஜ் ஆகியோர் 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் தம்பதி¬யும், பிறந்து 40 நாட்கள் ஆன குழந்தையையும் வெட்டிப் படுகொலை செய்தனர். போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தஞ்சை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 3 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் சிவசுப்பிரமணியனுக்கு 37 ஆண்டுகள், ராமகிருஷ்ணன், துரைராஜ் ஆகிய 2 பேருக்கும் தலா 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், மகேந்திரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.