ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்படும்!: சாஸ்த்ரா பல்கலைக்கு தஞ்சை ஆட்சியர் கெடு

ரும் அக்டோபர் 3ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் கட்டிடங்கள் இடிக்கப்படும் என்று சாஸ்த்ரா பல்கலைக்கு தஞ்சை ஆட்சியர் கெடு விதித்துள்ளார்.

\தஞ்சையை அடுத்த திருமலைசமுத்திரம் பகுதியில் சாஸ்த்ரா பல்கலை செயல்படுகிறது. இப்பல்கலை மீது ஆக்கிரமிப்பு புகார்கள் தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தமிழக அரசின் சிறைத்துறைக்குச்  சொந்தமான 58.17 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை சாஸ்த்ரா பல்கலை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த நிலத்தை கைய கப்படுத்த அரசு முயன்றது. இதை எதிர்த்து சாஸ்த்ரா பல்கலைக் கழகம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை முதலில் விசாரித்த தனி நீதிபதி, உரிய இழப்பீட்டைப் பெற்றுக் கொண்டு அந்த ஆக்கிரமிப்பு நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக் கழகத்துக்கே வழங் கலாம்” என தீர்ப்பளித்தார். ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதி களில் ஒருவரான நூட்டி ராமமோகனராவ், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிர மித்துள்ள நிலத்துக்கு ஈடாக ரூ.10 கோடியைப் பெற்றுக்கொண்டு அந்த நிலத்தை அவர்களிடமே ஒப்படைக்கலாம்” என தீர்ப்பளித்தார். ஆனால், மற்றொரு நீதிபதியான எஸ்.எம்.சுப்பிரமணியம், பல கோடி பெறுமானமுள்ள அரசு சொத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களிடமே திருப்பி ஒப்படைப்பது என்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். ஆகவே, அந்த சொத்தை வேலி போட்டு பாதுகாப்பதுடன் மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என உத்தரவிட்டார்.

இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப் பினைப் பிறப்பித்ததால் இந்த வழக்கு விசாரணை மூன்றாவது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் முன்பாக நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழகம் ஆக்கிரமித்து வைத் துள்ள அரசு நிலத்தை உடனடியாக தமிழக அரசு கையகப்படுத்தவேண்டும்” என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்ட்டது.

இந்த நிலையில், “சிறைத் துறைக்கு சொந்தமான 58.17 ஏக்கர்களில், கட்டப்பட்ட சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் கட்டிடங்களை, காலி செய்யாவிட்டால்,  அக்டோபர் 3ம் தேதி  அன்று அந்த கட்டிடங்கள் காவல்துறை உதவியோடு இடிக்கப்படும்” என்று, சாஸ்திரா பல்கலைக்கழகத்துக்கு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று சமூகஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.