தஞ்சை:

த்திய அரசு அமல்படுத்த உள்ள புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து  தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு மத்தியஅரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்ற உடனேயே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மத்தியஅரசின் புதிய கல்விக்கொள்கையை அறிவித்தார். கல்வி என்ற பெயரில் இந்தியையும் அதன் வழியாகச் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை இருந்ததால் தமிழகத்தில் பல எதிர்ப்பு கிளம்பியது. அதுபோல மேற்குவங்கம் உள்பட பல மாநிலங்களும் கடுமையாக எதிர்த்தன.

அதைத்தொடர்ந்து, புதிய கல்விக்கொள்கையை ரத்து செய்யக்கோரித் தொடர் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில்,   தஞ்சை சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் 1000திற்கும் மேற்பட்ட மாணவர்கள், “மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது. அந்த கல்விக் கொள்கையின் வழியாகத்தான்  இந்தி, சமஸ்கிருதம் தினிக்கப்படும். அதனால் அந்த திட்டத்தை ரத்து செய்யவேண்டும்” என்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதேபோல், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை வாபஸ் பெற வலியுறுத்தி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.