தஞ்சை:

கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கோவில் அர்ச்சர் களுக்கு, அந்த பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் அரிசி, பருப்பு உள்பட மளிகை சாமான்கள் வழங்கினர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள கோவில் அர்ச்சகர்களுக்கும் வருமானம் பாதிக்கப்பட்டு உள்ளது. கோவிலில் பூஜை நடைபெற்றால், அதன்மூலம் வருமானம் கிடைக்கும். அதுபோல சுபநிகழ்ச்சிகளை நடத்த வைத்தாலும் அவர்களுக்கு ஒரளவு வருமானம் கிடைக்கும்.

தற்போது அனைத்தும் முடங்கிய நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள விநாயகர் கோயில் அர்ச்சகர் உள்பட அந்த பகுதியில் வசித்து வந்த அர்ச்சகர் குடும்பங்களுக்கு தஞ்சாவூர் அய்யங்கடைத் தெரு பள்ளிவாசல் இமாம் முகமது ருஸ்தும் அலி ஏற்பாட்டின்படி, ரசாஏ முஸ்தபா அறக்கட்டளை சார்பில் தலா ரூ.800 மதிப்புள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.