சென்னை,
பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தங்கமகன் மாரியப்பனுக்கு 2 கோடி ரூபாய் பரிசு வழங்கி வாழ்த்தினார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பாரா ஓலிம்பிக்ஸ் 2016 போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற த.மாரியப்பனுக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  வழங்கினார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
பிரேசில் நாட்டின், ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பாரா ஓலிம்பிக்ஸ் 2016 போட்டியின் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார்,
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த த.மாரியப்பன். அவருக்கு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு, தமிழக அரசின் சார்பில் 2 கோடி ரூபாய் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று 10.9.2016 அன்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, பாரா ஓலிம்பிக்ஸ் 2016 போட்டியின் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற த.மாரியப்பனுக்கு உயரிய ஊக்கத் தொகையான
2 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று வழங்கி வாழ்த்தினார்.
தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,
தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் ராஜேந்திர குமார், மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணா ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கு  ரூ.2 கோடி
இதனிடையே, 2017-ம் ஆண்டுக்கான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்திட, தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.2 கோடிக்கான காசோலையை, தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் எம்.ஏ.அழகப்பனிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.