நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா மும்பை காவல் நிலையத்தில் புகார்

பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா சக நடிகர் நானா படேகர் மீது மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். படப்பிடிப்பின் போது நானா படேகர் தனதுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக தனுஸ்ரீ தத்தா புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

tanushree

பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா நேற்று ஒஷிவாரா காவல் நிலையத்தில் சக நடிகர் நானா படேகருக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யும்படி புகார் ஒன்றை அளித்தார். 2008ல் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பின் போது நானா படேகர் தன்னிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார் மனுவில் தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக மும்பை காவல்துறை செய்தித் தொடர்பாளர் டிசிபி மஞ்சுநாத் சிங்கே கூறுகையில், “ பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ புகார் அளித்தது உண்மைதான். ஆனால் இன்னும் படேகர் மீது எப்ஐஆர் வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை. இப்பிரச்சினையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன “ என்றார்.

நடிகை தனுஸ்ரீ தனது வழக்கறிஞருடன் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு காவல்நிலையம் வந்துள்ளார். அப்போது நானா படேகர், நடன இயக்குநர் கணேஷ் ஆச்சாரியா, இயக்குநர் ராகேஷ் சாரங் மற்றும் தயாரிப்பாளர் சமீ சித்திக்கி ஆகியோருக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்குமாறு தனுஸ்ரீ தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டார். சித்திகி சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் தன்னைப் பற்றி மிகவும் மோசமாக பேசியதாக அவர் தெரிவித்திருந்தார்.

2008ஆம் ஆண்டில் ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தின் போது தான் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக புகார் மனுவில் தனுஸ்ரீ தத்தா விவரமாகத் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் நடைபெற்ற அதே ஆண்டில் இது குறித்த குற்றச்சாட்டுக்களைத் தெரிவிக்க முனைந்தபோது தொடர்புடைய திரைப்பட முக்கியஸ்தர்கள் தன் தரப்பு நியாயத்தை தடுத்து நிறுத்தியதாகவும் புகாரில் தனுஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.

பாடல் காட்சியின் போது நடிகர் நானா படேகர், ஒரு பெண்ணான தன்னை மோசமான அளவுக்கு கேவலப்படுத்தியதாகவும், அவர் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

படேகர், ஆச்சார்யா, சித்திகி, சரங் மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சிக்காரர்கள் சிலர் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் 354, 354 (A), 509 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி தனுஸ்ரீ தனது மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ட்விங்கிள் கன்னா உட்பட பாலிவுட் பிரபலங்கள் பலர் தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் அமிதாப் பச்சன் உள்ளிட்ட சிலரும் இரு தரப்புக்கும் ஆதரவு தெரிவிக்க இயலாத நிலையில் உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து வரும் தனுஸ்ரீக்கு எதிராக சிலதினங்களுக்கு முன் நானா படேகர் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி