பாலியல் புகார்: பிரபல நடிகர் நானாபடேகர் மற்றும் மூவர் மீது வழக்கு பதிவு

நடிகை தனுஸ்ரீ தத்தா அளித்த பாலியல் புகாரையடுத்து திரைப்பட நடிகர் நானா படேகர் உள்பட 4 பேர்   வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் நானா படேகர், நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீ சித்திக், இயக்குநர் ராகேஷ் சரங் ஆகியோர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தொல்லை கொடுத்ததாக  இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றம்சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நானா படேகர் இந்த குற்றச்சாட்டை மறுத்தார்.

இதற்கிடையே மும்பை காவல்நிலையத்தில் கடந்த 6-ம் தேதி தனுஸ்ரீ தத்தா புகார் அளித்திருந்தார். கடந்த 2008-ம் வருடம் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பின்போது நடிகர் நானா படேகர் உள்ளிட்டோர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நானா படேகர் உள்ளிட்ட நால்வர் மீதும் 354, 509 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் புகார்  குறித்து விசாரிக்க மும்பை ஒஷிவாரா காவல்நிலையத்துக்கு நேற்றிரவு தனுஸ்ரீ தத்தா அழைக்கப்பட்டார். அவரிடம் அங்கு வாக்குமூலம் பெறப்பட்டது.

இதையடுத்து நானாபடேகர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை பாயும் என்று மும்பை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.