சென்னை,
ற்போது உருவாகி இருக்கும் நாடா புயல் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம். தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று தமிழக அமைச்சர் கூறி உள்ளார்.
இன்று காலை புயல் கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்ட தமிழக அமைச்சர், புயல் காரணமாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வங்க கடலில் மையம் கொண்டுள்ள நாடா புயல் நாளை காலை கரையை கடக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வீச்சில் எடுக்கப்பட்டு உள்ளது.
அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள், நீர்நிலைகள், ஆற்றங்கரை ஓரம் வசிப்பவர்கள், பாதுகாப்பான இடத்தில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
stom-uday
தமிழக அரசின் வருவாய்த்துறை அதிகாரிகள் நிலைமைகளை கண்காணித்து உடனுக்குடன் மக்களுக்கு உதவுவது மட்டுமின்றி மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:-
புயலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் மீட்பு குழுவினர் தயாராக வைக்கப்பட்டுள்ளனர். எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளதால் புயல் பற்றிய வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 24 மணி நேரம் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் 1077 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம். மாநில அளவில் 1070 என்ற தொலைபேசி எண்ணில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டு உள்ளனர். மழை-புயலால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்டறிந்து அதற்கேற்ப செயல்பட்டு வருகிறார்கள்.
மீட்பு பணிக்கு தயார் நிலையில் படகுகளும் உள்ளன. உள்ளூர் மீனவர் வாலிபர்களும் உதவ காத்திருக்கிறார்கள். பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு தேவையான உணவு-உடை தயாராக உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் எங்களுக்கு உடனுக்குடன் தகவல் வருகிறது. நாங்களும் இங்கிருந்து நிலைமைகளை கண்காணித்து வருகிறோம். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.