விரலை துண்டித்து 7 நிமிடம் சித்ரவதை செய்து ஜமால் கொலை – சவுதி மீது துருக்கி புதிய புகார்

மாயமான பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜியை சவுதி அரேபியா ஏவிவிட்ட நபர்கள் 7 நிமிடங்கள் கொடூரமாக சித்ரவதை செய்து விரலை துண்டித்து கொலை செய்ததாக துருக்கி புதிய புகாரை தெரிவித்துள்ளது.

Jamal

கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஜமால் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்டில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தார். இந்நிலையில் துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்தார். இதன் காரணமாக கடந்த வாரம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்ற ஜமால் மாயமானார்.

இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், அதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது.

இந்நிலையில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரத்தில் நாளுக்கு நாள் பல அதிர்ச்சியான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. துருக்கி அரசு பத்திரிக்கையான யேனி சபாக்கில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் ஜமால் 7நிமிடங்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

துருக்கி சார்பில் கூறப்பட்டுள்ளதாவது, ” எங்களுக்கு கிடைத்துள்ள ஆடியோ ஆதாரங்கள்படி, சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமால் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். 7 நிமிடங்கள் வரை இந்த சித்ரவதை நீண்டுள்ளது. பின்னர், அவரது தலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூரங்கள் சவுதி அரேபியா தூதர் முன்னிலையில் நடந்துள்ளது.

தூதரகத்தினுள் கொலை நடந்தால் தானும் சிக்கிக் கொள்வோம் என அஞ்சிய அவர் அதனை வெளியே சென்று செய்யுமாறு கூறுகிறார். மற்றொரு நபர் அவரை மிரட்டுகிறார். நாங்கள் கைப்பற்றியுள்ள வீடியோவில் இந்த காட்சிகள் அனைத்தும் உள்ளன “ என தெரிவித்துள்ளது