சென்னை: பொறியியல் மாணாக்கர் சேர்க்கையில் குறைந்தபட்சம் 60% இலக்கை அடைய பொறியியல் கல்லூரிகள் முயற்சிக்க வேண்டுமென மாநில உயர்கல்வித் துறை அறிவுத்தியுள்ளது.

இதுகுறித்து கூறப்படுவதாவது; அண்ணா பல்கலையின் இணைப்பில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளும், 700க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளும் செயல்படுகின்றன.

கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளாகவே தமிழக அளவில் பொறியியல் சேர்க்கையில் பெரிய சரிவும் தொய்வும் ஏற்பட்டு வருகிறது. மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆர்வம் கலைப் படிப்புகளை நோக்கி திரும்பிவிட்டது.

இதனால், பல பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் நிலையும் உருவானது. இந்நிலையில், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணாக்கர்களை சேர்க்கும் விஷயத்தில் இலக்கை நிர்ணயித்துள்ளது தமிழக உயர்கல்வித்துறை.

வரும் 2023ம் ஆண்டு வரை தொலைநோக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொறியியல் கல்லூரிகளில் 60% அளவிற்கு மாணாக்கர் சேர்க்கையை உயர்த்த வேண்டும்.

பொறியியல் கல்லூரிகளில் 50% மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 55% என்பதாக இலக்கை அடைய திட்டமிட வேண்டும். மேலும், இதுகுறித்த விபரங்களை மாநில உயர்கல்வித் துறைக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.