புதுடெல்லி: 2020-21ம் ஆண்டிற்கான நாட்டினுடைய உணவு தானிய உற்பத்தி இலக்கு 298.3 மில்லியன் டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

வேளாண் அமைச்சர் கூறியுள்ளதாவது, “வரும் ஆண்டில், இந்தியாவில் பருவமழை குறிப்பிட்டபடி சரியான விகித்தில் பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, உணவு தானிய வகைகளில் அரிசி உற்பத்தி இலக்கு 117.5 மில்லியன் டன்னாகவும், கோதுமை உற்பத்தி இலக்கு 106.5 மில்லியன் டன் என்பதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டைக் காட்டிலும் அதிகமாகும்” என்றார் அவர்.

வேளாண்மைத்துறை கமிஷனர் மல்கோத்ரா பேசும்போது, ” காரிப்பருவத்தில் 149.92 மில்லியன் டன்னும் ராபி பருவத்தில் 148.4 மில்லியன் டன்னும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பருப்பு வகைகளைப் பொறுத்தளவில், கடந்த ஆண்டு 23.02 மில்லியன் டன்னில் இருந்து 25.6 மில்லியன் டன்னாகவும், உணவுப்பொருள் அல்லாத எண்ணெய் வகையில் 34.19 மில்லியன் டன்னிலிருந்து 36.64 மில்லியன் டன்னாகவும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.