சமூக வளைதளங்களில் கல்லூரி மாணவிகள் குறித்து விமர்சித்தால் கடும் நடவடிக்கை – பினராயி விஜயன்

சமூக வளைதளங்களில் கல்லூரி மாணவிகள் குறித்து விமர்சிப்பவர்களை கேரள முதலமைச்சர் எச்சரித்துள்ளார். தனது குடும்ப சூழல் காரணமாக மீன் விற்கும் கல்லூரி மாணவியை விமர்சித்து சிலர் சமூக வளைதளங்களில் கருத்து பதிவிட்டனர்.

hanan

எர்னாகுளத்தை சேர்ந்த ஹனன் ஹமித் என்ற கல்லூரி மாணவி தனது குடும்ப சூழல் காரணமாக பகுதி நேர வேலையாக மீன் விற்று வருகிறார். அவர் கல்லூரி முடித்து விட்டு மாலை வேலையில் மீன் விற்றுவந்தார். இது குறித்து உள்ளூர் நாளேட்டில் சிறப்பு கட்டுரை வெளிவந்த நிலையில் ஹனன் செயலில் சந்தேகம் இருப்பதாக கூறி நெட்டிசன்கள் சமூக வளைதளமான பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டனர்.

இது குறித்து அறிந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஹனன் ஹமித் குறித்து பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும் தனது குடும்பத்திற்கு ஆதரவாக வேலை பார்த்து வரும் இளம்பெண்களை குறிவைத்து கருத்து பதிவிடக்கூடாது எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

hanan

“ ஹனன் செயலை நினைத்து நான் பெருமை அடைகிறேன். அவர் தனது படிப்பிற்கு தேவைப்படும் பணத்தை தானே சம்பாதித்து கொள்கிறார். யாரையும் எதிர்பார்க்கவில்லை. மிகவும் கடினமன சூழலில் இருந்து முன்னேறியுள்ளவர்களுக்கு தான் அந்த வலி தெரியும். அவரது சாதனைகளை சமூக வளைதளங்கள் அளவிடுவது தேவையற்றது” என்று பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹனன் மற்றவர்களுக்கு முன்னுதாரனமாக இருக்கிறார். அவருக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமையாகும் என்று தெரிவித்த பினராயி விஜயன், எர்னாகுளத்தின் மாவட்ட ஆட்சியர் ஹனனுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மலையாளத் திரைப்பட இயக்குநர் அருண் கோபி, தான் அடுத்து இயக்க உள்ள திரைப்படத்தில் ஹனனுக்கு வாய்ப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.