நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வரும் டிசம்பர் முதல்,  மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அவற்றை கடந்து செல்லும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. கட்டண வசூலுக்காக வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்படுவதால், நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பாஸ்டேக் பயணியர் குறிப்பிட்ட நேரத்தில், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அதேபோல், சரக்கு போக்குவரத்தும் தாமதமாகிறது. இதை தவிர்க்க, சுங்கச்சாவடிகளில், மின்னணு முறை மூலம் கட்டணம் வசூல் செய்யும் திட்டம் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், குறிப்பிட்ட சில சுங்கச்சாவடிகளில் மட்டுமே இந்த திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின்படி, வாகனங்களின் முன் பகுதியில், ‘பாஸ்டேக்’ எனப்படும், கார்டை பொருத்த வேண்டும். இந்த கார்டுகளை, குறிப்பிட்ட விலைக்கு முதலில் வாங்கி, நமக்கு தேவைப்படும் தொகைக்கு, ‘ரீசார்ஜ்’ செய்து கொள்ளலாம்.

இந்த கார்டுகள் பொருத்தப்பட்ட வாகனங்கள், சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும்போது, செலுத்த வேண்டிய கட்டண தொகை, ரேடியோ அதிர்வலை மூலம், தானாகவே கழித்துக் கொள்ளப்படும். நடவடிக்கை இதற்காக சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்த வேண்டியது இல்லை. இந்த திட்டம், வரும் டிசம்பர் முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேகமாக செய்து வருகிறது. இதற்காக, சுங்கச்சாவடிகளுக்கு, சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன.