பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகும் செல்லாத நோட்டுகளைப் பெற்ற டாஸ்மாக்..!

சென்னை: கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின்னரும், ரூ.57.29 கோடி அளவிற்கு செல்லாத நோட்டுகளை, வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுள்ளது டாஸ்மாக் என்ற தகவலை வெளியிட்டுள்ளது வருமான வரித்துறை.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 9 முதல் டிசம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் இந்த செல்லாத நோட்டுகள் ஏற்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இது அரசின் விதிமுறையை முற்றிலும் மீறிய செயல் என்று கூறப்பட்டுள்ளது.

கணினி அடிப்படையிலான CASS முறையின் மூலமாக கடந்த 2016-17 ம் ஆண்டிற்கான டாஸ்மாக் ஐடி ரிடர்ன்ஸ் செயல்பாட்டை சோதித்துப் பார்த்ததில் இந்த விஷயம் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

பணமதிப்பிழப்பு அறிவிப்பு நடைமுறையில் இருந்த காலகட்டத்தில், டாஸ்மாக் சார்பில் ரூ.140 கோடிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதில், 2016ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதியின் இருப்பின்படி ரூ.81.57 கோடிகளை கழித்துவிட்டால், நிலுவைத்தொகையான ரூ.57.29 கோடிகள் செல்லாத நோட்டுகளாகப் பெறப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.