சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த டாஸ்மாக் வழக்குகள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் முதலில் நிபந்தனையின் பேரில் அனுமதி வழங்கியது. பின்னர் நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என கோரி தொடரப்பட்ட மனுக்களை விசாரித்து, ஊரடங்கு முடியும் வரை தமிழகம் முழுவதுமுள்ள மதுபான கடைகளை மூட உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே, உயர் நீதிமன்ற பதிவாளர் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில், டாஸ்மாக் தொடர்பான வழக்கை 2 நீதிபதிகள் அமர்வுக்கு பதில் 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்று அறிவித்துள்ளார். இந்த அமர்வில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, பி.என்.பிரகாஷ் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு நாளை டாஸ்மாக் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.