சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதற்கு கமலஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் சென்னை உள்ளிட்ட சில இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்க்டைகலை நேற்று திறந்தது.  இதனால் மதுப்பிரியர்கள் வரிசையில் நின்று மது வகைகளை வாங்கினர்.  அத்துடன் பலர் குடித்து விட்டு சாலைகளில் விழுந்து கிடந்ததும் ஒரு சில இடங்களில் கொலை மற்றும் தற்கொலை நிகழ்ந்த செய்திகளும் வெளியாகின.

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி  சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர்.  அவர்களில் மக்கள் நீதி மய்ய கட்சியின் செயலாளரும்  ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான மவுரியாவும் ஒருவர் ஆவார்.  இந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் மே 9 அதாவது நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது இணையப் பக்கத்தில்,

“நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையும் சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்தத் தீர்ப்பு. மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. ‘மக்கள் நீதி மய்யம்’ மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது எனத் தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி #வெல்லும்தமிழகம்”

எனப் பதிந்துள்ளார்.