சென்னை:

தேசிய நெடுஞ்சாலைகளையும் மாநில நெடுஞ்சாலைகளையும் சாதாரண சாலைகளாக அறிவித்து  மீண்டும் சாராயக் கடைகளை திறக்கும் முயற்சியை அனைவரும் இணைந்து தடுக்க வேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

பா.ம.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு  மற்றும் சிலர் தொடுத்த வழக்கில், “இந்தியா முழுதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையியில் தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. மற்ற மாநிலங்களிலும் இதே போல மதுக்கடைகல் மூடப்பட்டன.

இதனால் வருமான இழப்பு ஏற்படுவதாக கருதி, மாநில நெடுஞ்சாலைகளை  சாதாரண சாலைகளாக அறிவிக்கும் முயற்சியில் பல மாநிலங்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில், “தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை சாதாரண சாலைகளாக மாற்றி மீண்டும் மதுக்கடைகளை கொண்டுவரும் முயற்சியில் மத்திய பாஜக அரசும் மாநில அதிமுக அரசும் ஈடுபட்டுள்ளன.. இந்த கூட்டுச்சதியை முறியடிக்க தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் இணைத்து போரிட வேண்டும்”  என்று மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் எழுதிய இக்கடிதத்தை பா.ம.கவைச் சேர்ந்த வழக்கறிஞர் க.பாலு மற்றும் மு.ஜெயராமன் ஆகியோர், மு.க. ஸ்டாலின் வீட்டில் அவரை சந்தித்து  அளித்தனர்.