டாஸ்மாக் வருமானத்தில் தள்ளாட்டம்: தமிழகஅரசு மீது மத்திய வருமான வரித்துறை வழக்கு

சென்னை:

டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வரும் தமிழக அரசு, அதற்கான வருமான வரி செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக தமிழகஅரசு மீது மத்தியஅரசின் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் மதுபான பார்கள் தமிழக அரசின்  மதுவிலக்கு மற்றும்  ஆயத்தீர்வை துறை மூலம்  நடத்தப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் தமிழகம் முழுவதும்  5,152 மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் 1,872 பார்கள் உள்ளன. இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 25 ஆயிரம் கோடி முதல் ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் கிடைப்பதாக கூறப்படுகிறது.

இந்த கடைகள் மற்றும் பார்கள் கடந்த 2018-19ஆம்  ஆண்டில் ரூ.31ஆயிரத்து 157 கோடி வருமானத்தை அரசுக்கு ஈட்டி கொடுத்துள்ளது.

பொதுவாக வார நாட்களில் சுமார் 70 கோடி ரூபாய் வரை கல்லா கட்டும் டாஸ்மாக், வார இறுதி நாட்களில் ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடி வரை வருமானத்தை ஈட்டுவதாக கூறப்படுகிறது. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற  விஷேச தினங்களில் ரூ.500கோடியை தாண்டி வருமானத்தை குவிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவித்து உள்ளன. இந்த ஆண்டு (2020) ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி 1ந்தேதி ரூ.450 கோடிக்கு மது விற்பனை செய்துள்ள நிலையில் பொங்கலுக்கு ரூ.610 கோடி விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானங்களைக்கொண்டே தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களுக்கு செலவிடுவதாக கூறப்படுகிறது.

ஆனால், டாஸ்மாக் நிறுவனம், வருமான வரித்துறைக்கு காட்டியுள்ள கணக்கில், டாஸ்மாக்கில் வருமானமே இல்லை, டாஸ்மாக்கில் நஷ்டம் ஏற்படுவதாக பொய் கணக்கு காட்டி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கு மாநில அரசே வாட் வரி (மதிப்பு கூட்டு வரி) விதித்துக்கொள்ளலாம் என மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

அதன்படி, டாஸ்மாக் நிறுவனம் விற்பனை செய்யும் மதுபானங்களும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு பெற்றுள்ள நிலையில், தமிழகஅரசு வாட் வரிகளை கடுமையாக உயர்த்தி ‘குடி’ மக்களிடம் இருந்தும் பணத்தை பிடுங்கி வருகிறது.

ஜிஎஸ்டி-க்கு முன்பு, பொதுவாக வாட் வரி 5 சதவிகிதமே இருந்து வந்த நிலையில், ஜிஎஸ்டிக்கு பிறகு வாட் வரியை ஒவ்வொரு மாநிலமும் அவர்களின் வசதிக்கு ஏற்ப விதித்து வருகின்றன.

தமிழகஅரசும்  மதுபானங்களுக்கான வாட் வரியை 220 சதவிகிதம் முதல் 270 சதவிகிதம் வரை உயர்த்தி குடி மகன்களிடம் இருந்து பணத்தை பிடுங்கி வருகிறது.

அதன்படி சாதாரண மது பாட்டில் ஒன்றுக்கு குறைந்த பட்சம்  220 சதவிகிதம் வாட் வரி விதித்துள்ளதுடன் கேன் மூலம் விற்பனை செய்யப்படும் வைன்-களுக்கு 270 சதவிகிதம் வரை வாட் வரி விதித்து,  மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்து வருகிறது.

ஆனால், வருமான வரித்துறைக்கு சமர்ப்பித்துள்ள கணக்கு வழக்குகளில், டாஸ்மாக் மதுபானங்கள் மூலம் நஷ்டம் வருவதாக தெரிவித்து உள்ளது.

வருமான வரித்துறைக்கு டாஸ்மாக் சார்பில்  சமர்ப்பிக்கப்பட்டுள்ள வருமான வரி கணக்கில், டாஸ்மாக் மதுபான விற்பனையால் லாபம் இல்லை, நஷ்டமே என்று கூறியுள்ளது.

அதாவது, மாநில அரசு விதித்துள்ள வாட் வரி (அதாவது 220% முதல் 270%) வருமானத்தை கழித்து (Deduct) கணக்கு தாக்கல் செய்துள்ளது. அதன்படி, தங்களுக்கு டாஸ்மாக் மதுபான விற்பனையால் லாபம் இல்லை, நஷ்டமே என்று கூறியுள்ளது.

தமிழகஅரசு பீர் பாட்டிலுக்கு  260% வாட் வரி விதித்துள்ளது. உதாரணமாக,  ஒரு பீர் பாட்டிலின் விற்பனை விலை ரூ.150 ஆக வைத்துக்கொள்வோம். இந்த விலைக்குள் 260% வாட் வரியும் அடக்கம்.  அதன்படி, ரூ.150 கொண்ட பீர் பாட்டில் ஒன்றுக்கு வாட் வரி மூலம் ரூ.108.34 பைசா வருமானம் தமிழக அரசுக்கு கிடைக்கிறது.

இந்த வாட் வரி வருமானம் முழுவதும் தமிழக அரசுக்கே சொந்தம். இதுமட்டுமின்றி, கொள்முதல் விலையில் இருந்து மேலும் குறிப்பிட்ட சதவிகிதம் லாபத்தை வைத்து விற்பனை செய்கிறது….

ஆனால், வருவமான வரித்துறைக்கு தாக்கல் செய்துள்ள விவரங்களில், மாநில அரசின் வாட் வருமானம் உள்பட மறைமுக வருமான விவரங்களை மறைத்து, தங்களுக்கு டாஸ்மாக் மது பானங்கள் விற்பனை மூலம் லாபம் இல்லை, நஷ்டமே ஏற்பட்டு வருவதாக  ஏமாற்றி வருகிறது.

தமிழகஅரசின் இந்த ஏமாற்று வித்தையை எதிர்த்து, மத்திய வருமான வரித்துறை சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழகஅரசு மீது வழக்கு தாக்கல் போட்டுள்ளது…. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகஅரசு ஏற்கனவே சட்டமன்றத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை தொடர்பான கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் வாசகர்களுக்காக இங்கே குறிப்பிடப்பட்டுஉள்ளது.

கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருவாய் மற்றும் மதிப்புக்கூட்டு வரி மூலம் 26,995 ரூபாய் கோடி கிடைத்ததாகவும், ஆனால் 2017-18 ஆம் நிதியாண்டில் 26,794 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.