சென்னை,

மிழகத்தில் அரசு நிறுவனமான டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலை அதிரடியாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜெயலலிதா அறிவித்த பூரண மதுவிலக்கு கேள்விக்குறியாகி உள்ளது.

சென்னையில் இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு பதவி ஏற்றபோது, தமிழகத்தில் முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்றும், முதல்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடுவதாகவும் கையெழுத்திட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து உச்சநீதி மன்றமும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தர விட்டது. ஆனால், நெடுஞ்சாலைகளின் பெயரை மாற்றி, மீண்டும் மதுக்கடைகளை தமிழக அரசு திறந்தது.

இந்நிலையில், தற்போது மதுவின் விலைய உயர்த்தி முதல்வர் தலைமையிலான அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.

முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரைவை கூட்டம் நடைபெற்றது இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதிய குழு அளித்த பரிந்துரையின்படி, 20 % வரை ஊதியம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும்,  மதுபானங்களின் விலை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி,  குவாட்டர் பாட்டில் ஒன்றுக்கு ரூ.12 வரை உயர்த்தவும், பீர் பாட்டலுக்கு ரூ.5 வரை உயர்த்தவும் அமைச்சரவை  ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறி ஆட்சியை பிடித்த அதிமுக அரசு கண்துடைப்புக்காக முதலில் 500 மதுக்கடைகளை மூடிவிட்டு, பின்னர் ஆயிரக்கணக்கான மதுக்கடைகளை திறந்து, வாக்களித்த மக்களை ஏமாற்றி,  தமிழக இளைஞர்களை குடிகாரர்களாக மாற்றி வருகிறது.

 

சமீபத்தில் புதுச்சேரியிலும் மதுபானங்களின் விலையை புதுச்சேரி அரசு உயர்த்தியுள்ள நிலையில் தற்போது தமிழகத்திலும் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு முடிவு செய்திருப்பது குடிமகன்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.