அதிகவிலைக்கு மதுபானம் விற்பனை: அரசின் உறுதியை ஏற்று வழக்கு முடித்து வைப்பு…

சென்னை:
ரசு மதுபானக்கடைகளான டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான வழக்கில் அரசின் உறுதிமொழியை ஏற்று வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் முடித்து வைத்தது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறி, சேலம் மாவட்டம், ஜாரி கொண்டலாம்பட்டி பஞ்சாயத்து துணைத் தலைவர் குல்லு படையாச்சி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைகளின்போது,   “அரசு நிர்ணயித்த எம்ஆர்பி விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா? மதுபானங்கள் விற்கும்போது, ரசீதுகள் கொடுக்கப்படுகிறதா? ஒவ்வொரு மதுபானக் கடையிலும் விலைப்பட்டியல் ஒட்டப்படுகிறதா? அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கண்டுபிடிக்கப்பட்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என உயர்நீதி மன்றம்  சரமாரியாக கேள்விகளை எழுப்பியது.

இதையடுத்து, தமிழக அரசு சார்பில் கடந்த ஜூன் மாதம் 26ந்தேதி விசாரணையின்போது பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் பணியாளர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும், 1,000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதாகவும், இந்த அபராதத் தொகையை அவர்களிடம் இருந்து வசூலிப்பதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  கூடுதல் விலையில் மதுபானங்கள் விற்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்  என்று  டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அரசு உறுதி அளித்துள்ளது.  அரசு அளித்த பதிலை ஏற்று வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தது.

You may have missed