கொரோனா ஊரடங்குக்கு முன்பு 6 மணி நேரத்தில் ரூ.210 கோடி அள்ளிய டாஸ்மாக்…

சென்னை:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி கடந்த 24ந்தேதி மாலை 6 மணி முதல் டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என தமிழகஅரசு அறிவித்தது. இதையடுத்து தங்களுக்கு போதுமான அளவில் சரக்குகளை வாங்கிக் குவிக்க குடிகாரர்கள் மதுபானக் கடைகளை முற்றுகையிட்டனர். இதனால் பெரும்பாலான மதுபானக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்த நிலையில், அன்றைய தினம் தமிழகஅரசு அறிவிக்கப்பட்டதில் இருந்து டாஸ்மாக் கடைகள் மூடப்படும் நேரம் வரை சுமார் இடைப்பட்ட 6 மணி நேரத்தில் ரூ.210 கோடி மதிப்பிலான அளவில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தில் உள்ள வணிக வளாகங்கள், பெரிய கடைகளை மூட மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடவில்லை. இது சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தது. டாஸ்மாக் கடைகளில் கூடிய கூட்டம் காரணமாக, நோய் தொற்று எளிதாக பரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், 24ந்தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டிய சூழலுக்கு தமிழகஅரசு தள்ளப்பட்டது. இந்த நிலையில்தான் சுமார் 6 மணி நேரத்தில் ரூ.210 கோடி ரூபாய் அளவிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்ப்டடு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமும் மத்திய மாநில அரசோடு இணைந்து, வீட்டைவிட்டு வெளியே செல்வதை தவிர்ப்போம்… கொரோனா வைரஸ் கோரப் பிடியில்  இருந்து நம்மை  பாதுகாப்போம்…