கொரோனா பரவலில் டாஸ்மாக்குக்கு பெரும் பங்குண்டு! ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்புக்கு டாஸ்மாக்கும் காரணம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டன. பின்னர் சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில், மதுபான சில்லறை விற்பனை கடைகள் கடந்த மே 7 ஆம் தேதி முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
சென்னையில் தொற்று அதிகரிப்பு காரணமாக, டாஸ்மாக் கடைகள் திறக்க இதுவரை அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், நாளை (ஆகஸ்டு 18) முதல் சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கி உள்ளது தமிழகஅரசு.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்)  வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனை கடைகள் வரும் 18 ஆம் தேதி முதல் இயங்கும். மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது.

மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

மதுபானக் கடைகளுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் மற்றும் தனி மனித இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடித்தல் வேண்டும் என்று கூறி உள்ளது.

தமிழகஅரசின் அறிவிப்புக்கு திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

சென்னை தவிர பிற மாவட்டங்களில் Covid19 பரவியதில் TASMAC-க்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு. யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்! ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும் பெருக்கிட கூடாது!

என எச்சரிக்கை விடுத்துள்ளார்.