மதுரை:
குடிமகன்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக முதல்வர் டாஸ்மாக் கடைகள் திறக்க உத்தரவிட்டு உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்து உள்ளார்.
இன்று  மதுரையில் கரிசல்குளம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய அமைச்ச்ர, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது,  மே 17-க்கு பிறகு ஊரடங்கு நீடிக்க கூடாது என்று எல்லோரும் ஆண்டவனை வேண்டிக் கொள்ளுங்கள் என்றவர்,   மதுரையில் கடந்த 2 தினங்களாக ஒருவர் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என்று கூறியவர்,  கொரோனா நிவாரண நிதியாக இந்த மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், நிதி நிலையை கணக்கில்கொண்டு, முதல்வர் பரிசீலிப்பார் என்றார்.
மேலும், தமிழக குடிமகன்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், பொருளாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் டாஸ்மாக் கடைகளைத் திறக்க முதல்வர் முடிவு செய்தார். எல்லாரும் மதுக்கடையை திறந்த பின் நாம் திறக்காமல் இருக்க முடியாது என்று அதிரடியாக கூறினார்.