சென்னை:

நெடுஞ்சாலை ஓரங்களில்.. அதாவது..  500 மீட்டருக்குள் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் 3 ஆயிரம் மதுக்கடைகளுக்கு மேல் மூடப்பட்டுள்ளன.

இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் அரசுக்கு வந்துகொண்டிருந்த வரி வருவாய் கணிசமாக குறைந்துவிட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றி, முன்பிருந்து டாஸ்மாக் மதுக்கடைகளை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் உலவுகிறது.

காஞ்சிபுரம் “ஓட்டல் தமிழ்நாடு” – ஒரு பகல் நேரத்தில்…

இப்படி அரசுக்கு வருமானம் குறைந்துவிட்டது ஒரு புறம் என்றால், இன்னொரு வகையில் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது.. அதே மது விற்பனை மூலம்.

தமிழக அரசின் சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் “தமிழ்நாடு ஓட்டல்” தமிழகம் முழதும் இருக்கின்றன. அங்கு அனுமதி பெற்ற மதுக்கூடம் உண்டு.

ஆனால் அரசு நிர்வாகத்தில் இருக்கிறது என்றாலே வாடிக்கையாளர்களுக்கான சேவை சரியாக இருக்காது என்ற நிலைதானே…  ஆகவே அங்கு ஆகப்பெரும்பாலும் யாரும் செல்வதில்லை.

உதாரணமாக, காஞ்சிபுரம் நகரில் பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலையில் இருக்கும் “ஓட்டல் தமிழ்நாடு” பற்றி சொல்லாம்.

இங்கும் எப்போதும் மதுக்கூடம் தூங்கி வழிந்தபடியே இருக்கும். அதுவும் பகல் நேரத்தில் ஓரிரு வாடிக்கையாளர்கள் மட்டுமே வருவார்கள்.

ஆனால் காஞ்சிபுரத்திலும் பெரும்பான்மையான மதுக்கடைகள் மூடப்பட்டதால், இங்கு இப்போதெல்லாம்  அனைத்து நாற்காலிகளும் நிரம்பிவிடுகின்றன என்கிறார்கள் ஊழியர்கள்.

அதுமட்டுமல்ல.. இருக்கை கிடைக்குமா என்று சிலர் நின்றபடி காத்திருக்கும் நிலை நிலவுகிறது என்கிறார்கள்.

இங்கு டாஸ்மாக் மதுக்கடைகளைவிட மதுபாணங்களின் விலை  அதிகம்தான். ஆனாலும் கூட்டம் குறைந்தபாடில்லை.

இதுவரை லாபத்தையே பார்க்காத “ஓட்டல் தமிழ்நாடு” கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து – மதுக்கூடத்தின் உதவியால் – லாபத்தை நோக்கி நடைபோடுகிறதாம்.

ஆக டாஸ்மாக் மூடலால் அரசுக்கு பெருமளவில் நட்டம் ஏற்பட்டாலம் “ஓட்டல் தமிழ்நாடு” மூலம் கொஞ்சம் லாபம் வரத்தான் செய்கிறது!