சென்னை:

கொரோனா ஊரடங்கு நாடு முழுவதும் மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் மதுபானக்கடைகளும் மே 3ந்தேதி வரை மூடல் தொடரும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்து உள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்த நிலையில், தமிழகஅரசு ஏப்ரல் 30ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது. இன்று பேசிய பிரதமர் மோடி, மே 3ந்தேதி வரை  ஊரடங்கை நீட்டித்து உள்ளார்.

இதற்கிடையில், மாநிலத்தின் முக்கிய வருமானமான மதுபானக்கடைகள் திறப்பதற்கு பல்வேறு மாநிலங்கள் முயற்சி எடுத்து வருகின்றன. தமிழகத்திலும், மதுபானக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால், மது கிடைக்காத விரக்தியில் சிலர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. அதுபோல கள்ளச்சாராய விற்பனையும் மீண்டும் களைக்கட்டி உள்ளது.

இதனால், தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. புதிய நேர கட்டுப்பாட்டுகளுடன் டாஸ்மாக் கடைகளை அரசு திறக்க முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்துறை அமைச்சர் தங்கமணி, மக்கள் நலனே முக்கியம் என்பதால் ஏப்ரல் 30-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் கண்டிப்பாக திறக்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.