சென்னை: கொரோனா ஊரடங்கால் சென்னையில் டாஸ்மாக் தொழிலாளர்கள் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மக்களின் இயல்பு வாழ்க்கையோ, பொருளாதார நிலைமையோ மாறவில்லை.

குறிப்பாக தொற்று அதிகம் காணப்படும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏழை, எளிய மக்கள் வருவாய் இன்றி கடும் சிரமத்தில் இருக்கின்றனர். ஏராளமானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். அதன் நீட்சியாக, சென்னையில் டாஸ்மாக் கடையுடன் இணைக்கப்பட்ட பார் ஒன்றில் வேலை செய்யும் ஊழியர்கள் காய்கறி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.

மூவரும் புறநகர்ப்பகுதிகளில் இருந்து காய்கறிகளை கொண்டு வந்து உள்ளூர்வாசிகளுக்கு விற்பதற்காக பாருக்கு முன்னால் தற்காலிகமாக ஒரு கடையை அமைத்துள்ளனர். கே. கே. நகரில் ராஜமன்னார் சாலையில் அமைந்துள்ள இந்த கடையில் தினமும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்கின்றனர்.

காசாளர், சமையல்காரர் மற்றும் பணியாளர் என பல நிலைகளில் பொறுப்புகளை வகித்த ஊழியர்கள், அத்யாவசிய பொருட்களுக்கான கடும் போட்டி காரணமாக காய்கறி வியாபாரத்துக்கு திரும்பியுள்ளனர்.

இது குறித்து டாஸ்மாக் பாரில் பணியாற்றிய சமையல்காரர் பழனி கூறியதாவது: இது முற்றிலும் ஒரு புதிய முயற்சி. நாங்கள் பால் பாக்கெட்டுகளை வழங்க நினைத்தோம், ஆனால் ஏற்கனவே கடுமையான போட்டி இருந்தது. எனவே, காய்கறிகளை விற்பனை செய்வதை தேர்ந்து எடுத்தோம் என்றார்.

பார் செயல்படும் போது நாங்கள் தினசரி ரூ .500 முதல் ரூ .700 வரை சம்பாதித்தோம். இப்போது, ​​காய்கறி வர்த்தகம் மூலம் கிடைக்கும் வருமானம் ஓரளவு தான் கை கொடுக்கிறது. இருந்தாலும் ஊரடங்கு நெருக்கடியினால் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்று மற்றொரு பார் ஊழியர் வசந்த் கூறினார்.