டில்லி

வாகன விற்பனை வீழ்ச்சி காரணமாக அசோக் லேலண்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவன தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

நாடெங்கும் வாகன விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக வர்த்தகத் துறை வாகனங்களான லாரி, டெம்போ போன்றவைகளின் விற்பனை வீழ்ச்சி பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்த விற்பனை வீழ்ச்சியால் உற்பத்தி ஆன வாகனங்கள் உற்பத்தியாளர்களிடம் தேங்கி உள்ளன. இந்த வாகனங்கள் விற்பனை செய்யும் வரை உற்பத்தியை பல நிறுவனங்கள் குறைத்துள்ளன. அப்படி இருந்தும் கடந்த மாதம் மட்டும் விற்பனை ஆகாத வாகன எண்ணிக்கை 15-20% அதிகரித்துள்ளது.

இந்த வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் அசோக் லேலண்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை முன்னிலையில் உள்ளன. இந்த இரு நிறுவனங்களும் பெருமளவில் பாதிப்பு அடைந்துள்ளன. இந்த வர்த்தக வாகனங்களை வாங்குவோருக்கு சரியான அளவில் போக்குவரத்துக் கட்டணம் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே வர்த்தக வாகனம் வைத்திருப்போருக்கு போதுமான அளவு வருமானம் கிடைப்பதில்லை என்பதால்  புதிய வாகனங்கள் வாங்குவதை பலர் நிறுத்தி உள்ளனர்.

டாடா மோடார்ஸ் நிறுவனம் மாதத்தில் இரு நாட்கள் தங்களின் உற்பத்தி தொழிற்சாலையை மூட உத்தேசித்துள்ளது. அதை ஒட்டி நேற்று அதாவது ஜூலை 13 மற்றும் வரும் 22 ஆம் தேதி அன்று டாடா மோடார்ஸ் நிறுவனம் தனது தொழிற்சாலையை மூட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அடைப்பு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கலாம் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அசோக் லேலண்ட் நிறுவனம் தனது பந்த்நகர் தொழிற்சாலையை கடந்த 11 ஆம் தேதி முதல் மூடி உள்ளது. இந்த தொழிற்சாலை மீண்டும் 24 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை தொழிலகமான சென்னை தொழிற்சாலை கடந்த மாதம் சுமார் ஒரு வார காலத்துக்கு மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.