புதுடெல்லி: 
டாடா நிறுவனம் புதிய பல்நோக்கு செயலியை அறிமுகப்படுத்துகிறது.
டாடா குழுமம் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு மிகப்பெரிய செயலியை வெளியிடுவதற்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இது உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் இ-காமர்ஸ் சந்தையான அமேசான் மற்றும் இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசுடன் போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செயலி உணவு, மளிகை பொருட்கள், பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள், நுகர்வோர் பொருட்கள் காப்பீடு, சுகாதாரம், நிதி சேவைகள் போன்றவற்றை வழங்கும். இதைப்பற்றி டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகர் கூறியுள்ளதாவது, இது ஒரு மிகப்பெரிய செயலியாக இருக்கும், பல பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும், இன்னும் எவ்வாறெல்லாம் இதனை மேம்படுத்தலாம் என்று நாங்கள் சிந்தித்து வருகிறோம், எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புள்ளது என்று தெரிகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனம்  தனியார் டிஜிட்டல் நிறுவனங்களிடமிருந்து 20 பில்லியன் டாலர்களை  திரட்டியதை தொடர்ந்து, இதனுடைய வளர்ச்சி மிகவும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
டாடா குழுமம் இந்தியாவின் பல லட்சம் மக்களை தொடும் என்றும், அன்றாடம் சாதாரண வேலை செய்யும் அனைவரும் பயன்படுத்தும்படியாக இது இருக்கும் என்றும் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
 இதேபோன்று டென்சென்ட், அலிபாபா, மைடுவான் டியான்பிங்  போன்ற சீன பல்நோக்கு செயலிகளும் மிகவும் பிரபலமாக உள்ளன. டாடா குழுமத்துடைய இந்த புதிய பல்நோக்கு செயலியின் விபரங்கள் தற்போது கிடைக்கவில்லை.