சமையல் அறைக் குப்பையில் ஓடும் பஸ் : டாடா அறிமுகம் !

புனே

டாடா நிறுவனம் குப்பையில் ஓடும் பஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

குப்பையும் கோபுரமாகும் என சினிமாவிலோ சீரியலிலோ சவால் டயலாக்குகள் சொல்வதுண்டு.  உண்மையில் குப்பையை வைத்து கோபுரம் உருவாக்க முடியாது.  ஆனால் குப்பையால் ஓடும் வாகனங்களை உருவாக்க முடியும் என டாடா நிறுவனம் கூறுகிறது.

பயோ –சிஎன்ஜி என்னும் எஞ்ஜின் ஒன்றை இந்த பஸ்களில் பொருத்தியுள்ளது டாடா நிறுவனம்.  இது சமையலறையின் குப்பைகள், மற்றும் மிச்சம் மீதி உணவுகளை எரிப்பதன் மூலம் இயக்கப்படுகிறது.  இதனால் குப்பைகளை அழிப்பதுடன், அதை எரிபொருளாகவும் பயன்படுத்த முடியும் என டாடா நிறுவனம் சொல்கிறது.  குப்பைகளை எரிப்பதன் மூலம் உருவாக்கப்படும் பயோ மீதேன் கேஸ் தான் இந்த எஞ்ஜின்களில் எரிபொருளாகும்

எதிர்காலங்களில் உருவாக்கப்படப் போகும் ஸ்மார்ட் சிடிகளுக்கு இது போன்ற பஸ்கள் இன்றியமையாததாக விளங்கும்.  குப்பைகள் சேரச்சேர அவற்றை அழிப்பதை இது சுலபமாக்கும்.  இந்த எஞ்ஜின்கள் மினி பஸ்கள் வேன்கள், உள்ளூர் பயணிகளுக்கான பஸ்கள் ஆகியவற்றுக்கு மிகவும் உகந்தவையாகும்.

புனே நகரில் இது போன்ற ஒரு பஸ் சோதனை ஓட்டமாக விடப்பட்டுள்ளது.  இதில் வெளியாகும் புகை மற்ற வாகனங்களில் வெளியாகும் புகையை விட மாசு குறைவாக இருக்கும் என டாடா நிறுவனம் உறுதி அளிக்கிறது.

இன்னும் இதன் இறுதி விலை என்ன என்று அறிவிக்கப்படவில்லை.  நானோ கார்களின் உற்பத்தியை நிறுத்தியதால் ஏற்பட்டுள்ள மார்க்கெட் சரிவை சரிக்கட்டவே இந்த பயோ மீத்தேன் பஸ்கள் உற்பத்தியில் டாடா இறங்கியுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது