டாடா நானோ : விரைவில் வழக்கொழியும் அபாயம்

கொல்கத்தா

டாடா நிறுவனத்தின் கனவு திட்டமான நானோ கார் கடந்த மாதம் ஒரே ஒரு கார் மட்டுமே உற்பத்தி ஆகி உள்ளது.

ஒரு காலத்தில் சிறிய கார்கள் என்பது இந்தியாவுக்கு மிகத் தேவையாக இருந்தது.   அதை நிறைவேற்ற மாருதி உருவாகியது.    அதை மறைந்த காங்கிரஸ் தலைவர் சஞ்சய் காந்தியின் கனவு திட்டம் எனக் கூறலாம்.   அதன் பிறகு மலிவான கார் வரிசையில் முதல் முதலாக அல்லது இது வரை ஒரே ஒரு மாடலாக உள்ளது டாடாவின் நானோ கார் ஆகும்.

டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாட்டா இந்திய மக்களுக்காக லட்ச ரூபாய் விலையில் ஒரு கார் என்னும் திட்டத்தில் டாடா நானோ காரை உருவாக்கினர்.   கடந்த 2006ல் வெளி வரும் என எதிர்பாக்கபட்ட டாடா நானோ தனது முதல் காரை 2008 ல் வெளியிட்டது.   ஏற்கனவே ஆட்டோ உலகில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஏஸ் க்கு இணையாக இதுவும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப் பட்டது

டாடா நானோவின் முதல் கார் வெளியான 2008 ஐ விட அதன் விற்பனை ஆரம்பித்த 2009ல் உதிரி பாகங்கள் விலை கணிசமாக உயர்ந்தன.    அதை ஒட்டி நிர்வாகம் விலையை உயர்த்தியது.   ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு கார் என்னும் கோஷம் அடி வாங்கியது.   கார்கள் என்றாலே ஆடம்பரம் என எண்ணும் இந்திய மக்களிடையே டாடா நானோ வரவேற்பை பெறவில்லை.

அத்துடன் அதன் குறைகளான சிறிய இடவசதி, சில இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துக்கள், பவர் ஸ்டியரிங் இல்லாமை ஆகியவைகளை பற்றி பெரிதாக பேசப்பட்டது.   அதனால் நானோரில் ஒரு சில மேம்பாடுகளை செய்த டாடா நிறுவனம் நானோ ஃபேஸ்லிஃப்டை என்னும் மாடலை அறிமுகம் செய்தது.   ஆனால் அந்த மாடலும் வரவேற்பை பெறவில்லை.

நானோ கார் ஆண்டுக்கு 2.5 லட்சம் உற்பத்தியை எட்டியது.   ஆனால் விற்பனை அதில் 10% கூட இல்லாமல் போனது.   மேலும் 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் நானோகார்கள் வெறும் 481 மட்டுமே விற்பனை ஆனது.  அதை ஒட்டி டாடா நிறுவன தலைவர் சைரஸ் மிஸ்திரி இந்த நானோ உற்பத்தியை நிறுத்தி விட யோசனை அளித்தார்.

அதில் வந்த தகராறில் சைரஸ் வெளியேற்றப்பட்டார்.   அதன் பிறகு ரத்தன் டாடா இந்த நானோ காரின் புதிய வடிவமைப்புகள் பற்றி பரிசோதனை செய்து வருகிறார்.    டாடா நிறுவனம் கடந்த மாதம் ஒரே ஒரு நானோ கார் மட்டுமே உற்பத்தி செய்துள்ளது அதிர வைக்கும் செய்தி ஆகும்.   இவ்வாறு விற்பனை குறைந்தால் டாடா நானோ என்பது வழக்கொழிந்து போகும் என ஆட்டோமொபைல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.