டாடா நேனோ கார் உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்படுமா?

டில்லி

டாடா நிறுவனத்தின் சிறிய காரான நேனோ உற்பத்தி விரைவில் நிறுத்தப்படும் என கூறப்படுகிறது.

டாடா கார் நிறுவன அதிபரின் செல்லக் குழந்தை என கூறப்படுவது டாடா நேனோ என்னும் சிறிய காராகும்.    கடந்த 2008ஆம் வருடம் இதன் முதல் மாடல் டில்லியில் காட்சிக்கு வைக்கப்பட்டது.   அப்போது இந்தக் காரின் விலை ரூ.1 லட்சம் என கூறப்பட்டதால் பலரும் இந்தக் காரின் மீது ஆர்வம் கொண்டனர்.   அப்போதைய விலைக்கு இது உலகிலேயே மிகவும் மலிவான காராக விளங்கியது.

ஆனால் உற்பத்திச் செலவு மற்றும் உதிரிபாகங்கள் விலை ஏறத்தினால் இந்தக் காரின் விலையும் அதிகரித்தது.    அதை ஒட்டி இந்தக் கார் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையை எட்ட வில்லை.    அத்துடன் இந்தக் கார் பலருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் கார்ப் பிரியர்கள் இந்தக் காரை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.

இந்தக் காரை வாங்க பலர் ஆர்வம் காட்டாததால் கடந்த 2017ஆம் வருடம் இந்தக் கார் உற்பத்தி நிறுத்தப்படும் என தகவல்கள் வந்தன.   ஆயினும் இந்த தகவலை டாடா நிறுவனம் மறுத்தது.    இந்தக் காரின் உற்பத்தி குறைக்கப்படும் எனவும் ஒரே ஒரு தொழிற்சாலையில் மட்டும் நேனோ கார் உற்பத்தி நடைபெறும் எனவும் அறிவித்தது.    அத்துடன் இந்தக் காருக்கும் நிறுவனத்துக்கும் ஒரு உணர்வு பூர்வ உறவு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வருடம் ஜூன் மாதம் மூன்று கார்கள் மட்டுமே விற்பனை ஆனதால் சென்ற மாதம் ஒரே ஒரு நேனோ கார் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.   அத்துடன் இந்த கார் உற்பத்தி செய்யும் சனந்த் தொழிற்சாலையில் மற்ற மாடல்கள் கார்களை உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.    அதனால் இனி நேனோ கார்கள் உற்பத்தி நிறுத்தப்படும் எனவும் அதற்கு பதிலாக வேறு விலை மலிவான கார்களை டாடா நிறுவனம் தயாரிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.