புற்றுநோய் மருத்துவ மேம்பாட்டிற்கு டாடா ரூ.1,000 கோடி ஒதுக்கீடு

மும்பை:

ஐந்து மாநிலங்களில் புற்றுநோய் மருத்துவமனைகளை மேம்படுத்த டாடா நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாயை வழங்க முன்வந்துள்ளது. ராஜஸ்தான், ஜார்கண்ட், உ.பி., ஆந்திரா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளை புதுப்பிக்கவும், கூடுதல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் விஸ்தரிப்பு செய்யவும் இதில் திட்டமிடப்பட்டுள்ளது.

மும்பை அருகே பரேலில் உள்ள டாடா நினைவு மருத்துவமனையில் நாடு முழுவதும் இருந்து நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். இங்கு 60 சதவீததிற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை இலவசமாகவோ அல்லது அதிக மானியத்துடன் வழங்கி வருகிறது.

இங்கு சிகிச்சைக்கு காத்திருக்கும் நோயாளிகளின் பட்டியில் அதிக அளவில் இருப்பது பெரும் சுமையாக உள்ளது. இங்கு 700 படுக்கைகள் உள்ளன. ஆண்டுதோறும் 67 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4.5 லட்சம் நோயாளிகள் தொடர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா நோயாளிகளும் இங்கு வந்து செல்கின்றனர்.

அதோடு மும்பை போன்ற பெருநகரங்களில் நோயாளிகளின் குடும்பத்தினர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கு பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் சிகிச்சையை பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுகிறது. தற்போது ஏற்படுத்தப்படவுள்ள புதிய வசதிகள் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.

டாடா அறக்கட்டளையில் ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தில் மருத்துவமனைகளின் உள்கட்டமைப்புகள், மருத்துவ உபகரணங்களுக்கு செலவிடப்படவுள்ளது. டாக்டர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கு டாடா நினைவு மருத்துவமனையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் ஏற்கனவே உள்ள மருத்துவமனையை மேம்படுத்த மாநில அரசுடன் டாடா நிறுவனம் ஒப்பந்த செய்துள்ளது. இங்கு ரூ. 540 கோடியில் மேம்பாடு பணிகள் நடைபெறவுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் புதிதாக ரூ. 200 கோடி செலவில் மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. மாநில அரசு இதற்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மருத்துவமனை அமைக்க 23.5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உ.பி. மாநிலம் வாரனாசியில் உற்ற ரெயில்வே புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையம் மேம்படுத்தப்படவுள்ளது. ஆந்திரா மாநிலம் திருமலையில் மருத்துவமனை அமைக்க திருப்பதி தேவஸ்தான போர்டு 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த மேம்பாடு பணி மற்றும் புதிய மருத்துவமனைகள் தொடங்கப்பட்டால் வட இந்திய நோயாளிகள் சிகிச்சைக்கு மும்பை வர வேண்டிய நிலை ஏற்படாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.