டில்லி

நாடாளுமன்ற புதிய கட்டிடம் கட்ட டாடா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு டில்லியில் சவுத் பிளாக் அருகில் உள்ள செண்டிரல் லிஸ்டா பகுதியில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் கட்ட திட்டம் தீட்டியது.  இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.  ஆயினும் பாஜக அரசு பிடிவாதமாக புதிய கட்டிடம் கட்டும் முயற்சியில் இறங்கியது.   இந்த கட்டிடம் கட்ட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

இந்த கட்டிடம் தரை தளம் மற்றும் இரு மாடிகளுடன் முக்கோண வடிவில் அமைக்கத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.  இக்கட்டிடத்தின் மேற்கு பகுதியில் அசோக சின்னம் அமைக்கப்பட உள்ளது.   இந்த கட்டிடம் கட்டும் பணிக்கு மொத்தம் 7 நிறுவனங்கள் விலைப்புள்ளிகள் அளித்திருந்தன.  அவற்றில் டாடா, எல் அண்ட் டி, மற்றும் சபூர்ஜி பலோன் ஜி ஆகிய நிறுவனங்கள் தகுதி பெற்றன.

இன்று இந்நிறுவனங்களின் விண்ணப்பங்கள் மத்திய அரசின் பொதுப்பணித்துறையால் பிரிக்கப்பட்டது.   இதில் 861 கோடி 90 லட்சத்துக்கு டாடா நிறுவனம் விலைப்புள்ளி கோரி இருந்தது.  இதற்குச் சற்று அதிகமாக எல் அண்ட் டி நிறுவனம் 865 கோடிக்கு விலைப்புள்ளி அளித்திருந்தது.   இதையொட்டி டாடா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

புதியதாக அமைய உள்ள கட்டிடத்தில் ஒரே நேரத்தில் 900 முதல் 1200 உறுப்பினர்கள் அமர இடம் இருக்கும். இந்த கட்டடப்பணிகள் வரும் 2022 ல் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.